நடைப்பயிற்சி

உடல் தன்னைத்தானே அறியும் முயற்சியே நடைப்பயிற்சி. அதுசாலை ஓர நடைபாதையாக இருக்கலாம், நதியின் கரையாக இருக்கலாம், வனத்தில் நடக்கலாம், வெறுமனே குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்வதாகவும் இருக்கலாம். நடப்பது என்பது ஒரு அறிதல், கண்டுபிடிப்பு, உரையாடல், நட்பு செயல்பாடு, ஒரு தியானம், பிரதிபலிப்பு, பிரார்த்தனை. நமது அன்றாடவேலைகளில் பலவிதமான செய்திகளையும் பலன்களையும் கொண்டது நடைப்பயிற்சி மட்டுமே.

நடைப்பயிற்சியில் கடைசி தூரத்தை எட்டும்போது நீங்கள் உங்கள் உடலை சவாலுக்கு இழுக்கிறீர்கள். உங்கள் உடலில் வியர்வை பொங்கி வழியும்போது விளையாட்டு, வலி இரண்டுமே இருக்கிறது. அன்றாடம் நடக்கும் தூரத்தைவிட கூடுதலாக ஒரு மைல் நடைப்பயிற்சியைப் பூர்த்தி செய்துவிட்டு, ஓய்ந்துபோய் ஒரு தேநீருக்காகவோ, பிஸ்கெட் சாப்பிடவோ அமர்பவர் உணரும் சாதனையை போர்வீரன்கூட உணரவே முடியாது.

வாழ்க்கையின் கொண்டாட்டமான தருணங்களில் ஒன்றாக நடை இருக்கிறது. நடக்கும்போது வெவ்வேறு புலன்களும் செயல்படுகின்றன. நீங்கள் பார்க்கிறீர்கள், நீங்கள் தொடுகிறீர்கள், நிற்கிறீர்கள், எதையோ நினைவுக்குக் கொண்டுவர முயல்கிறீர்கள். நாம் நடக்கும்போது உலகத்துடன் உரையாடுவது மட்டுமின்றி, ஆழமான புரிதலுக்காகக் கேள்வியும் கேட்கிறோம்.

நகரங்கள் நடப்பவர்களுக்கு சாத்தியமற்றதாக மாறிவருகிறது. பாதசாரிகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறார்கள். ஒருவரின் நடை அவருடைய உயிரியலோடு தொடர்புடையதுதான். ஆனால் ஒரு நகரத்தின் வரலாற்றுடன் நுட்பமான தொடர்புடையது. சிறந்த நகரங்கள் பாதசாரிகள் வழியாகவே உயிர்ப்புடன் உள்ளன. அவர்களது நடைச் சடங்குகள் நகரத்தை வரையறுக்கின்றன. எல்லா இடங்களையும் பரிச்சயம் உள்ளதாக மாற்றுகின்றன. நகரில் ஓடும் மிதிவண்டிகள் இன்னும் மனிதத்தன்மை மிகுந்தவையாக இருக்கின்றன. ஆனால் ஒரு கார் நம்மைக் கடக்கும்போது, நகரம் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறது.

பாதசாரிகளை முன்னிட்டுத்தான் நகர்ப்புறத் திட்டமிடுதல் தொடங்கப்படவேண்டும். நகர்ப்பகுதிகளில் நடந்துசெல்லாமல் நம்மால் முறைசாராப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ளமுடியாது. அந்த முறைசாராப் பொருளாதார வழிமுறைகளில்தான் நம்மில் 70 சதவீத குடிமக்கள் வாழ்கின்றனர்.

நடப்பது குறைந்தால் பஜாரும், சாலையோர காபிக்கடையும் மறைய தொடங்குகின்றன. வாழ்வதற்கு கட்டுப்படியாகும் நகரத்தை நமது நடை வழியாகவே உருவாக்க முடியும். டீக்கடைக்காரர், பேல்பூரி விற்பவர், வடை, பஜ்ஜி கடைகள், வெற்றிலை கடைக்காரர், பூ விற்பவர், குப்பை அள்ளுபவர் அனைவரும் வாழ்வதற்கு தகுந்த நகரம் எனில் அதுதன் இதயத்தில் பாதசாரிகளைப் புரிந்துகொண்டதாக இருக்க முடியும்.


Post a Comment

0 Comments